கடந்த 2002 ஆம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற படம் வெளியாகிறது. திரைக்கதை-வசனம் செல்வராகவன், இயக்கம் கஸ்தூரி ராஜா என டைட்டிலில் போடப்பட்டுள்ளது. யார் இயக்குநர், யார் நடிகர் என்றே தெரியாமல் படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஒல்லியான நோஞ்சான் உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று கிண்டலடிக்கின்றனர்.
அந்த நடிகரின் பெயர் தான் தனுஷ். அடுத்த படம் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ’காதல் கொண்டேன்’. இப்படத்தில் உளவியல் சிக்கல் உள்ள மாணவனாக நடித்திருந்தார். தனது ஆரம்ப கால திரைப்பட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் தனுஷ் இப்படி கூறியுள்ளார்.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15940192_3.jpg)
உருவம் : அதாவது துள்ளுவதோ இளமை படப்பிடிப்பு சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் யார் இப்படத்தின் ஹீரோ என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் நான் தான் என்று சொல்லியிருக்கிறார், அதை கேட்ட அந்த நபர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். ஆம், அப்போது தனுஷை பார்த்த யாரும் ஹீரோ என்றே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் தனுஷே கூட விருப்பம் இன்றித் தான் சினிமாவில் நடித்திருப்பார்.
தன்னம்பிக்கை : ஆனால் அதன்பிறகு தனது தன்னம்பிக்கை மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் ஆளுமையாக உயர்ந்துள்ளார். ’திருடா திருடி’ படத்தில் மன்மதராசா பாடலுக்கு தனுஷ் ஆடிய ஆட்டம் தமிழ்நாட்டையே ஆட்டிவைத்தது எனலாம். அதன்பிறகு தனது அண்ணன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் நடித்தார். தனுஷ் என்ற நடிகனை ரசிகர்களுக்கு இப்படம் அறிமுகப்படுத்தியது.
ஒரு பள்ளி மாணவன் விதிவசத்தால் ரவுடியாக மாறியதை அவ்வளவு ராவாக இயக்கியிருந்தார் செல்வராகவன். ஆனால் படம் வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் தனுஷின் உடல்வாகு. இவன் எல்லாம் ரவுடியா இவனால் எப்படி அத்தனை பேரையும் அடிக்க முடியும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இதே படம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15940192_4.jpg)
வெற்றி கூட்டணி: தனது இயல்பான நடிப்பால் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார் தனுஷ். அதன்பிறகு தான் அந்த வரலாற்று கூட்டணி இணைந்தது. ’பொல்லாதவன்’ வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம். இந்த படம்தான் தனுஷ் யார் என்பதை அனைவருக்கும் காட்டியது.
தான் எவ்வளவு பெரிய நடிகன் என்றும் நடிப்புக்கு உடல்வாகு தேவையில்லை என்பதையும், தன்னை பார்த்து சிரித்தவர்களுக்கும் பதிலடி கொடுத்தார். அதுவும் அந்த மருத்துவமனை காட்சியில் டேனியல் பாலாஜியிடம் பேசும் காட்சியில் தனுஷின் நடிப்பு உச்சகட்டம். அதனை தொடர்ந்து ’யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ’மாப்பிள்ளை’, ’வேங்கை’ என்று கமர்ஷியல் படங்களிலும் நடித்து தன்னை நிரூபித்தார்.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15940192_5.jpg)
இப்படி சென்ட்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என அனைத்து ஏரியாவிலும் தன்னை திறம்பட தயார்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஆனால், இடையில் வந்த ’மயக்கம் என்ன’, ’3’ ஆகிய படங்கள் தனுஷின் நடிப்பிற்கு தீணி போட்ட படங்களாக அமைந்தது.
கோலிவுட் டூ ஹாலிவுட்: 2013 ல் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கும் சென்றார். ஒல்லியான தேகம் என கிண்டல் செய்தவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. தனுஷ் என்னதான் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் ’அசுரன்’, ’கர்ணன்’, ’வட சென்னை’ போன்ற பரிசோதனை படங்களில் நடித்து தான் ஒரு இயக்குநர்களின் நடிகன் என்பதை நிரூபித்தார்.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15940192_2.jpg)
கமர்ஷியல் மற்றும் பரிசோதனை படங்கள் என இரட்டை குதிரையில் பயணித்தாலும் தனது கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டே இருக்கிறார். இந்திக்கு சென்ற தனுஷ் பிறகு ’தி எக்ஸ்ராடினரி ஜெர்னி ஆஃப் ஃபகிர்’ படம் மூலம் ஹாலிவுட்டிலும் கொடி நாட்டினார். மீண்டும் ’ஷமிதாப்’, சமீபத்தில் வெளியான ’அந்தராங்கி ரே’ ஆகிய இந்திப் படங்கள் தனுஷை ஒரு மகா நடிகனாக்கியது.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15940192_1.jpg)
அதன் பயன் இன்று உலகமே போற்றும் ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பன்முகம்: சாதாரண பள்ளி மாணவனாக நடிக்கத் தொடங்கிய தனுஷ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சந்தித்த தனுஷ் இப்போது வாத்தியாகி விட்டார். வெங்கி அட்லூரி இயக்கும் ’சார்’ படம் மூலம் முதல் முதலில் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். இப்படம் தமிழில் ’வாத்தி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-dhanush-birthday-spl-script-7205221_27072022165134_2707f_1658920894_1035.jpg)
நடிகராக மட்டுமல்லாது பாடலாசிரியர், பாடகர் என பயணித்த தனுஷ் ’ப.பாண்டி’ திரைப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநராக வெற்றிகண்டார். மேலும் தயாரிப்பாளராக ’காக்கா முட்டை’, ’விசாரணை’ போன்ற தரமான படங்களையும் தயாரித்துள்ளார்.
![நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-dhanush-birthday-spl-script-7205221_27072022165134_2707f_1658920894_760.jpg)
இப்படி சினிமாவில் உள்ள அனைத்து துறையிலும் சாதனை படைத்து வரும் தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையும் படிங்க: தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்: வெளியானது 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் - நாளை டீஸர் ரிலீஸ்!