சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’ஜப்பான்’. இந்த படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் ஆகும். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் கார்த்தி, “மெட்ராஸ் படம் பார்த்து நீங்க அட்வைஸ் பண்ணினது ஞாபகம் இருக்கிறது. இந்த மாதிரி கதைகள் தேர்வு செய்து நடிங்க அப்படினு சொன்னீர்கள். ஒவ்வொரு படம் தேர்வு செய்யும் போதும் கவனமாக இருப்பேன். இப்போதும் கவனமாக இருக்கிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்துள்ளது. வெவ்வேறு பார்வையாளர்கள் மனதிலும் நான் இடம் பிடித்தது புது அனுபவமாக உள்ளது.
பொன்னியின் செல்வன் நடிக்கும் போது இன்னும் நிறைவாக இருந்தது. நான் துணை இயக்குநராக இருக்கும் போது ஒன் லைனாக பார்த்தது பொன்னியின் செல்வன் கதை என்று தெரியாத அளவுக்கு தான் அறிவு இருந்தது. பிறகு அந்த படத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரம் பண்ணதாகட்டும், இந்த 25வது படமாகட்டும், மிகவும் மகிழ்ச்சியான பயணமாக இருக்கிறது.
இப்போது எல்லாம் ஒருவரை சந்திக்கும் முன்பே அவர் பற்றிய கருத்துகள் இணையத்தில் கிடைத்துவிடுகிறது. நல்ல வேளையாக இதற்கு முந்திய காலகட்டத்தில் நான் வந்துவிட்டேன். என்னுடைய அறிமுகம் உங்கள் மூலமாக நடந்தது. நீங்கள் சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள். அதை நான் ஒவ்வொரு முறை வெளியூர் போகும் போதும் புரிந்து கொள்கிறேன். நீங்கள் சொன்னதை வைத்து தான் அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
உங்களின் ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் இருக்க வேண்டும். தீபாவளி ரிலீஸ் எப்போதும் ஸ்பெஷலாக இருந்துள்ளது. ஜப்பான் படமும் தீபாவளிக்கு வருவது சந்தோஷமான விஷயம். படத்தைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன். ராஜுமுருகன் இயக்கத்தில் நடிப்பது புது அனுபவமாக இருந்தது. இந்த படம் எனக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். கார்த்தியின் அடையாளம் தெரியாமல் ஒரு படம் நடிக்கிறேன் என்றால் இந்த படம் தான் என்று நினைக்கிறேன். ஜப்பான் படத்தில் எனது கதாபாத்திரத்தின் வாய்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது. இது படத்தில் ஒர்க் ஆகும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: லேபில் வெப் தொடரில் அதிக ஆபாச வார்த்தைகள் - செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழு அளித்த பதில்!