சென்னை: ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு முதலில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அதிகபட்ச கனவாக இருந்தது. பின்னர் பாடகி ஜானகியால் எஸ்.பி.பியின் திறமை கண்டறியப்பட்டு, சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார். எஸ்.பி.பி, 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார்.
தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, தமிழ் மொழி உச்சரிப்பு சரியாக வராததால் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தமிழில் பாடும் வாய்ப்பை முதலில் இழந்தார். பின் அவரின் ஆலோசனையின் பேரில் ஓராண்டு தமிழ் மொழி பயிற்சி பெற்று, தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
உணர்வுகளை கடத்திய கலைஞன்: 70களில் பிறந்தவர்கள் முதல் 2Kக்கள் வரை அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் எஸ்.பி.பி, பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்துள்ளார். 'அடிமைப்பெண்’ முதல் ’அண்ணாத்த’ படம் வரை இந்த பாட்டுத் தலைவன் பாடிய பாடல்கள் ஏராளம்.
தலைமுறை இடைவெளி காணாத ஒரே ஒரு பாடகராக தமிழ் திரையுலக வரலாற்றில் எஸ்பிபி விளங்கி நிற்கிறார். 1966ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளைக் கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் பாடியவர். அதிலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு விதமான பாவங்களைத் தனது குரலில் வரவழைத்துச் சாதித்தவர்.
இப்படி எல்லாம் கூட பாட முடியுமா என்று ஆச்சரியப்படுத்தியவர். காதல், அன்பு, வீரம், ஆவேசம், சோகம், பரிதாபம், நட்பு, கவலை என அத்தனை உணர்வுகளையும் தனது குரலின் மூலம் ரசிகர்களுக்குக் கடத்தியவர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் தொடங்கிய இவரது பயணம், இளையராஜா காலத்தில் கோலோச்சியது.
எத்தனை எத்தனையோ பாடல்களை இளையராஜா இசையில் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள். கொண்டாட்டம், காதல், சோகம், விரக்தி என இவர் குரல் வழி வந்த பாடல்கள் எல்லாம், நம்மையும் அந்த உணர்வுக்குள் கடத்திவிடுபவை. ரஜினிக்கு அதிகமாக அறிமுகப் பாடல் பாடியது இவர்தான்.
தசாவதாரத்தில் எஸ்பிபி: அந்த பாடல்களைக் கேட்கும்போது எல்லாம் ஒருவகை கொண்டாட்டம் நம் மீது தொற்றிக் கொள்ளும். 1997இல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற தங்கத் தாமரை மலரே பாடலுக்காக முதல் முறையாகத் தேசிய விருது பெற்றார். அப்போது அவர் பாடத் தொடங்கி முப்பது ஆண்டுகளைக் கடந்திருந்தது.
ஆனால், இவர் பெற்ற முதல் தேசிய விருது அப்போதுதான். அதன் பிறகுதான் அந்த கூட்டணி தமிழ் சினிமாவில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்தன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்கள் எல்லாமே கிளாசிக் ரகம். இவர் பாடிய பாடல்களைக் கேட்டவர் எவருமே இவரது குரலின் வளைவு நெளிவுகளில் சற்று நேரம் அமர்ந்து செல்லாமல் இருக்க முடியாது.
அப்படிச் செல்லாவிட்டால் அவர் ரசிகராகவே இருக்க முடியாது. எம்எஸ்வி தொடங்கி இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மா, பரத்வாஜ், கார்த்திக் ராஜா, சிற்பி, பரணி, தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், இமான் என அத்தனை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய மாபெரும் கலைஞன் எஸ்பிபி.
தசாவதாரம் படத்திற்கு தெலுங்கில் எஸ்பிபிதான் டப்பிங் கொடுத்தார். தமிழில் கமல் பேசிய பத்து கதாபாத்திரங்களுக்கும் தெலுங்கில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த பங்களிப்பை செய்துள்ளார் எஸ்பிபி. கேளடி கண்மணி தொடங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அன்புள்ள அப்பாவாக, புத்திசாலித்தனமான அதிகாரியாக என இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இவரால் மட்டுமே செய்ய முடியும் என சொல்ல வைத்தவை. இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். சிகரம் படத்தில் வரும் 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' என்ற பாடல் இப்போதும் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Actress mirnalini ravi: இணையத்தில் வைரலாகும் மிருணாளினி ரவியின் ஹாட் புகைப்படங்கள்!