சென்னை: தமிழ் சினிமாவில் உலகப்புகழ்பெற்ற இசை அமைப்பாளராக விளங்குபவர், இசைஞானி இளையராஜா(The Maestro Ilayaraja). ஏராளமான ரசிகர்களின் எத்தனையோ தூக்கமற்ற இரவுகளுக்கு இப்போது வரையும் இவரது பாடல்கள்தான் அருமருந்தாக இருக்கின்றன. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். இப்படிப்பட்ட இசை ஞானி இளையராஜா சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன.
1976ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம், அன்னக்கிளி(Annakili). இப்படம் தான் இளையராஜா இசை அமைத்த முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இத்திரைப்படம் கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கர்நாடக இசையுடனும் இணைந்து இருந்தன. இப்படம் வெளியானபோது, தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் இந்தப் படத்தின் பாடல்கள் தான் ஒலித்தன. அந்த அளவுக்கு இந்தப் படத்துடன் அதன் பாடல்களும் ஹிட் அடித்திருந்தன. இன்னும் சொல்லப்போனால், இளையராஜாவின் இசைக்காகவே நூறு நாட்கள் ஓடியது.
இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமாக முதன்மை காரணமாக இருந்தவர், வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம். இவர்தான் இளையராஜா மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளரிடம் பேசி, இளையராஜாவை இப்படத்திற்கு இசை அமைக்க வைத்தார். அன்று மட்டும் பஞ்சு அருணாச்சலம் இப்படி செய்யாமல் இருந்து இருந்தால், இளையராஜா என்னும் இசைஞானி நமக்கு கிடைக்காமலேயே போய் இருப்பார்.
'அன்னக்கிளி உன்னை தேடுதே.., மச்சான பாத்தீங்களா..' உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இப்பாடல்களின் பின்னணி இசையிலும் இளையராஜா ஒரு ராஜ்ஜியமே நடத்தினார். ஒரு மாபெரும் கலைஞன் அறிமுகமான படமாக அன்னக்கிளி அமைந்தது. இளையராஜா தனது ஆரம்பக்காலத்தில் தனது அண்ணன் பாவலர் வரதராஜன் குழுவுடன் இணைந்து கச்சேரிகள் நடத்தி வந்தார்.

இக்குழுவில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனும் அடக்கம். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, பஞ்சு அருணாச்சலம் மூலமாக அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு பெற்றார். அதன்பிறகு நடந்தது எல்லாம் மற்றுமொரு சரித்திரம். அதுவரையில், தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவிலான இந்திப் பாடல்களையே கேட்டு வந்தனர்.
அவர்களை, நமது கிராமத்தின் இசையைக் கேட்க வைத்த பெருமைக்குரியவர், இளையராஜா. இதன்மூலம், இந்திப் பாடல்களை ரயிலேற்றி மீண்டும் மும்பைக்கே இளையராஜா அனுப்பி வைத்தார். இப்படி ஏகப்பட்ட பெருமைகளை பெற்ற அன்னக்கிளி படம் வெளியாகி இன்றுடன் (மே 14) 47 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இந்த இசை தீபம் இன்றும் அணையாமல் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிங்க: ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!