சென்னை: 2002ஆம் ஆண்டு இதே மே 10ஆம் தேதி வெளியாகிறது, அந்தப் படம். அதுவரையில் பள்ளி மாணவர்களை காட்டப்பட்ட விதத்தை அப்படியே மாற்றி விடலைப் பருவத்தின் வியர்வையைப் படம் பார்த்த ஒவ்வொருவர் மீதும் படிய வைத்திருந்தார், இயக்குநர். முதல் காட்சியில் மீசை கூட முளைக்காத சிறுவன் ஒட்டு மீசையுடன், அதுவும் ராணுவ உடையில் வருவதை, அப்போது தியேட்டரில் படம் பார்த்த அனைவருமே கண்டு சிரித்திருப்பர்.
ஆனால், அந்த விடலைப் பையன்தான் ஒருநாள் இந்திய சினிமாவின் நடிப்பு அசுரனாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் படம்தான் ‘துள்ளுவதோ இளமை’. அந்த நடிகன்தான் தனுஷ். நடிப்பு மீது ஆர்வம் இல்லாத தனுஷை, அவரது அண்ணன் செல்வராகவனும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும், இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து கொண்டிருந்தபோது, தனுஷ் ஆகிய இந்த இளம்பையன் தான் ஹீரோ என்று சொன்னதும், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த எல்லோருமே சிரித்துவிட்டார்களாம். ‘இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா.. அப்போ நானும் ஹீரோ தான்’ என அங்கிருந்த ஒருவர் இவரை கிண்டல் செய்துள்ளார். அந்த வலி, இப்போது வரைக்கும் தனக்கு உள்ளதாக ஒரு முறை பேட்டியில் கூறி இருந்தார், தனுஷ்.
ஏனென்றால் ஒல்லியான தேகம், ஒடுங்கிய முகம் என சினிமா நாயகனுக்கு உண்டானதாக கருதப்படும் எந்த கிளிஷே தகுதிகளும் அவரிடம் இல்லை. ஆனால், துள்ளுவதோ இளமையில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது அண்ணன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் நடிக்கிறார், தனுஷ்.
தனுஷை ஒரு நடிகனாக, கொஞ்சம் கொஞ்சமாக அவரது அண்ணன் செல்வராகவன் செதுக்கி இருந்தார். காதல் கொண்டேன் படத்தில் அது அப்படியே தெரியும். அந்த வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்த தனுஷ், ஆசிரியர் சொன்ன கணக்கை போட்டுவிட்டு, மீண்டும் வந்து படுத்துத் தூங்கும் காட்சி இன்று வரை கிளாசிக்.
காதலால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் தவிப்புகளை, தனது நடிப்பால் பார்வையாளர்களுக்கு கடத்தினார், தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘திருடா திருடி’ படத்தில் கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து ‘சுள்ளான்’ படத்தில் யார் ஒல்லியான பையன் என்று இவரை கிண்டல் செய்தார்களோ, திரையில் இவர் செய்த ஆக்ஷன் காட்சிகளுக்கு விசில் அடித்து கை தட்டினர்.
இதனையடுத்து ‘தேவதையை கண்டேன்’ சுமாரான வெற்றியைப் பெற்றது. பின்னர் ஒளி ஓவியன் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடித்து தனது நடிப்பில் அடுத்த கட்டத்தை அடைந்தார், தனுஷ். தனது ஆரம்பகால திரை வாழ்க்கையிலேயே பாலுமகேந்திராவின் படத்தில் நடித்தார். இதுவே தனுஷின் நடிப்பு வளர்ச்சிக்குச் சான்று. பாலுமகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் தான், வெற்றிமாறனை கண்டெடுக்கிறார், தனுஷ்.
இதற்கு அடுத்த படம்தான், கல்ட் கிளாசிக். இன்று வரை கேங்ஸ்டர் படங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் படம். அதுதான் ‘புதுப்பேட்டை’. மீண்டும் தனது அண்ணனை நம்பி தன்னை முழுவதுமாக ஒப்படைத்தார், தனுஷ். ஒரு சாதாரண பள்ளி மாணவன், காலத்தின் சுழற்சியில் மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறும் கதையில் தனது முழு வித்தையையும் இறக்கினார், தனுஷ்.
பள்ளி மாணவன், கேங்ஸ்ட்ர் கும்பலில் நுழைவது, கேங்ஸ்டர் ஆக மாறியபோது என மாறிமாறி நடிப்பில் வெரைட்டி காட்டினார். அதுவும் சிறையில் அவர் தனிமையில் பேசும் காட்சிகள் எல்லாம் இன்று வரை ரசிக்கப்படுகிறது. தனது அண்ணனுக்குப் பிறகு தனுஷின் திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்றால், அது வெற்றிமாறன்தான்.
இந்த கூட்டணி முதல் முறையாக ‘பொல்லாதவன்’ படத்தில் இணைந்தது. இந்தப் படமும் தனுஷின் நடிப்பு பசியை போக்கிய படமாக மாறியது. சாதாரணமாக மிடில் கிளாஸ் பையனாக திரையில் அதகளம் பண்ணினார். மருத்துவமனையில் டேனியல் பாலாஜியைப் பார்த்து ‘போட்றா போட்றா’ என அவர் கண்களாலேயே பேசியது அல்டிமேட் ரகம்.
பின்னர் ஆடுகளம் படத்திற்கு மீண்டும் இந்த கூட்டணி இணைந்தது. ஆனால், இந்த முறை மற்றொரு அதிசயமாக தேசிய விருதுகளையும் குவித்தது, இந்தக் கூட்டணி. சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். தொடர்ந்து தமிழில் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தவர், இந்தியிலும் தனது கொடியை நாட்டினார்.
அங்கேயும் தொடர்ந்து வெற்றிகளை குவித்தவர், ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிவை பெருமைப்படுத்தினார். நடிப்பு தவிர இயக்குநராகவும் முத்திரை பதித்தார். ப.பாண்டி(பவர் பாண்டி) படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார். பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் வலம் வருகிறார், தனுஷ்.
அசுரன், வேலையில்லா பட்டதாரி, கர்ணன் என சிகரங்களைத் தொட்டவர் தற்போது கேப்டன் மில்லராக தனது திரை வாழ்வில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார். இந்த நிலையில், இன்று தனுஷ் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யை இயக்க மறுத்த பாரதிராஜா - எஸ்.ஏ.சந்திரசேகர்