சென்னை: குறும்பட இயக்குநராக இருந்து கடந்த 2012ம் ஆண்டு 'பீட்ஸா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புதுமையான திரைக்கதையை கொண்டிருந்ததால், படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கான அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ரெட்ரோ பாணியில் வெளியாகியுள்ள இப்படத்தின் அறிமுக டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜிகர்தண்டா இரண்டாம் பாகமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி கார்த்தியின் 'ஜப்பான்' படமும், தனுஷின் 'கேப்டன் மில்லர்' படமும் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியானால், மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. அஜித்தின் படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. எனவே இந்தாண்டு தீபாவளி தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நடிகர்களின் கையில் சிக்கியுள்ளது. அஜித், விஜய் படங்கள் அல்லாத தீபாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.