புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் ஏப்ரல் எட்டாம் தேதி பெரியார் சிலை உடைக்கப்பட்டது. பிறகு, அதே இடத்தில் உடைக்கப்பட்ட சிலை புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
இச்சிலைக்கு மரியாதை செலுத்த வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது, தந்தை பெரியார் அனைவராலும் அன்போடு தந்தையாகவே அழைக்கப்படுகிறார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லி அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. உலக அளவில் தென்னாட்டின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவரும் பெரியார்தான்.
உலகம் போற்றும் தலைவரான பெரியாரின் சிலையை இப்படி உடைத்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மதவாதிகள் இப்படி செய்துள்ளனர்.
மே 23ஆம் தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறுவது உறுதி. அதற்குப்பின் நிச்சயம் நாட்டிலேயே பல்வேறு மாற்றங்கள் வரும். இப்பகுதியின் காவல் துறைக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். மிக விரைவில் இச்செயலை செய்த குற்றவாளியை கண்டறிந்து அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்யவேண்டும் என்றார்.