தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள காட்டுமன்னார்கோயில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை கடலூரில் உள்ள புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தபால் ஓட்டாக பதிவு செய்தனர்.
தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாமக அமைப்புச் செயலாளர் அசோக்குமார் என்பவர் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து, பாமக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுபிரசுரத்தை அரசு ஊழியர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். இதைபார்த்த தேர்தல் அதிகாரிகள் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பாமக பிரமுகர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அசோக்குமாரை கைது செய்தனர்.