கரூர் தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எந்தப்பக்கம் வாக்கு சேகரிக்க சென்றாலும் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு விரட்டியடிப்பது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டப்பேரவைக்குட்பட்ட லந்தக்கோட்டை பகுதியில் தம்பிதுரை வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் காலி குடங்களுடன் அவரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பல மாதங்களாக குடிக்க குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம். அப்படி குடிநீர் கிடைத்தாலும் கழிவு நீர் கலந்த குடிநீர் கிடைக்கிறது. இதனை குழந்தைகள் குடித்தால் தொற்றுநோய் பரவ வாய்ப்பிருக்கிறது.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த பயனில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தம்பிதுரையிடம் தெரிவித்தனர். மேலும், கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டிலில் வைத்து துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கொடுத்து நீங்கள் குடித்து பார்த்து பிறகு சொல்லுங்கள், நாங்கள் இதைத்தான் குடிக்கிறோம். ஏசி அறையில் இருக்கும் உங்களுக்கு எங்களுடைய கஷ்டம் எப்படி தெரியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மக்களின் கையில் இருந்த குடிநீரை கையில் வாங்கிய தம்பிதுரை அதனை குடிக்க மறுத்து, அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றார். வாக்கு சேகரிக்க வந்த தம்பிதுரையை பொதுமக்கள் முற்றுகை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.