முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் வெயிலுக்கிடையே பரப்புரையில் ஈடுபட்டிருந்தாலும், கட்சியின் சமூக வலைதள அணியினர் குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு இளைஞர்களின் வாக்குகளை பெறுவதற்காக நிழல் உலகப்போரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
நள்ளிரவு வரை நடக்கும் பொதுக்கூட்டங்கள், அரசியல் தலைவர்களின் சுவர் ஓவியங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை ஒரு காலத்தில் தேர்தல் பரப்புரையில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதும் கிராமங்களில் இந்த மாதிரியான தேர்தல் பரப்புரைகள் அதிகம் நடந்து வருகிறது. இருப்பினும், அந்த இடத்தை தற்போது சமூக வலைதள பரப்புரைகள் பெரிய அளவில் கைப்பற்றியுள்ளது.
முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் சமூகவலைதளத்தில் தேர்தல் பரப்புரை செய்வதற்காகவே தனி அணியை உருவாக்கியுள்ளன. 'அஸ்பயர்' சுவாமிநாதன் தலைமையில் இயங்கும் அதிமுக அணி 'கயவர் டிவி' எனும் தலைப்பில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதிமுக-பாஜகவைச் சேர்ந்த சமூக வலைதள அணி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி உருவானது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக "ஒளிரும் மிளிரும்" என்ற பெயரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இயங்கியது. இந்த அணிதான் திமுக சமூகவலைதள அணியை கவனித்து அது வெளியிடும் மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுத்தது.
2016ஆம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனும் இணைந்து சமூகவலைதளத்தில் திமுகவுக்கான பரப்புரையை தொடங்கினார்கள். இந்த அணிதான் கடந்தகால தேர்தல் முடிவுகள், மக்கள் மனநிலை, தேர்தல் பரப்புரையில் இருக்கும் குறைபாடுகளை ஆராய்ந்தது. பாமக தலைவர்கள் அதிமுக கட்சியை விமர்சித்த வீடியோக்களை திமுக இணையதள அணியினர், அதிமுக-பாமக இடையேயான கூட்டணி உறுதியானதும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
நிர்மல் குமார் தலைமையில், 'நமோ வாரியர்ஸ்' எனும் பெயரில் பாஜக சமூகவலைதள அணி இயங்கி வருகிறது. மேலும் இந்த அணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த பத்தாண்டுகளை விமர்சித்தும், காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் நடந்து கொண்டதை மீம்ஸ்களாக தயாரித்தும் வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் சமூகவலைதள அணி வடிவேலு, விவேக், கவுண்டமணி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை கிண்டல் செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி ஆகியோர் தங்களின் முக்கிய அறிவிப்புகளை சமூகவலைதளத்தில் வெளியிடுகின்றனர். பல விதமான தேர்தல் பரப்புரைகளை பார்த்த முதியவர்கள், தற்போதைய தேர்தல்களை கலை இழந்ததாகவே கருதுகின்றனர். பதாகைகள், ஒலிப்பெருக்கிகள், தலைவர்களுக்கு அணிவிக்கும் மலர்மாலைகள், முழக்கங்கள், கட்சிகளுக்கான தேர்தல் பாடல்கள் போன்றவை காண்பது அரிதாகிவிட்டது. தேர்தல் பரப்புரைகள் தற்போது கைபேசியிலும், மடிக்கணிணியிலும் அடங்கிவிட்டது.