விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழித்தேவன் நமது ஈடிவி பாரத் செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, 'விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு விதமான சிக்கல்கள் உள்ளன. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழில், சாத்தூரில் பேனா நிப்பு, அருப்புக்கோட்டையில் நெசவுத் தொழில் என அனைத்துத் தொகுதிகளிலும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது.
இதை தவிர்த்து இந்த ஆறு தொகுதிகளுக்கும் புராதனமாக இருப்பது விவசாயம். குறிப்பாக இந்தப் பகுதியில் பருத்தி விவசாயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் உள்ளூர் பண முதலைகளுடன் சேர்ந்துகொண்டு மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை விவசாயிகளை விதைக்க வலியுறுத்துகிறார்கள். இதனால் இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய பருத்தி விதை மறைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் விளையும் பருத்தி ரகம் உலகத்திலேயே அதிக தரம் வாய்ந்தது. இதற்கு அடுத்த தரம் ரஷ்யாவின் மாஸ்கோவில்தான் விளைகிறது. நமது மண்ணுக்கேற்ற அப்பாரம்பரியத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். இதை மீட்டெடுக்க பாடுபடுவோம். சாத்தூர் தொகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் வைப்பாறு ஏறக்குறைய காணாமல் போய்விட்டது.
இந்த ஆறு குறித்து கவிஞர் வைரமுத்துகூட மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும்... என்று பாடலில் எழுதியிருப்பார். இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த இந்த ஆற்றை காப்பாற்றினாலே, குளம் குட்டைகள் பாதுகாக்கப்படும்.
அண்மையில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணமாக அருப்புக்கோட்டையில் இருந்த நெசவுத்தொழில் தற்போது நலிவடைந்து விட்டது. இந்தத் தொழிலை நம்பி நல்ல நிலையில் வாழ்ந்த தொழிலதிபர்கள்கூட இன்று வெறும் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். சிவகாசி பட்டாசுத் தொழிலை பொறுத்தவரை நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு நிபந்தனைகளும் வரையறைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
பசுமை பட்டாசு என்று இவர்கள் சொல்லுவது முறையாக வரையறுக்கப்படவில்லை. அதில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் நாகமலை பகுதிகளில் மலர் விவசாயம் குறிப்பிடத்தக்க அளவு பங்களித்து வருகிறது. அந்த மலர்கள் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதில் நாங்கள் அக்கறை காட்டவுள்ளோம்' என தெரிவித்தார்.