விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதியான சாத்தூர் தொகுதிக்கும் வருகின்ற 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.ஜி.சுப்பிரமணியன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததால் தன் பதவியை இழந்தார்.
அவரே தற்போது அமமுக சார்பில் மீண்டும் களத்தில் நிற்கிறார். அதிமுக சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளராக வலம்வரும் எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் ராஜவர்மன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் வி.சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார்.
மூன்று பேருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இங்கு சமூக வாக்குகளை நம்பி எந்த வேட்பாளரும் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக அறியப்படும் முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சரிபாதியாக உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் நாயக்கர் சமூகத்தினரும், நாடார் சமூகத்தினரும் உள்ளனர்.
அமைச்சருக்கு நெருக்கமானவர் என்ற முறையிலேயே ராஜவர்மனுக்கு சீட் கிடைத்திருப்பது, அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அது தவிர, அமமுக வேட்பாளரும் பலம் பொருந்திய நபர் என்பதால், இங்கு அதிமுகவின் வாக்குகள் இரண்டாக சிதறும் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்கின்றனர் அப்பகுதி வாக்காளர்கள்.
இதை தனக்கு சாதமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் முன்னாள் அமைச்சரும், சாத்தூர் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் திமுக படு ஜோராக களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
பட்டாசு தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியான சாத்தூர், ஆனால் மாதக்கணக்கில் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் வேலையின்றி தவித்த பட்டாசுத் தொழிலாளர்கள் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் அதிமுகவுக்கு இழப்பு தான். இந்த தேர்தலில் பட்டாசு தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், விருதுநகரை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலை விட சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். காரணம் இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல், வருகிற மே23ஆம் மத்திய அரசை ஆட்டம் காண செய்யப்போகிறதோ இல்லையோ, மாநில அரசில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.