தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஏற்கனவே தங்களது அஞ்சல் வாக்கை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் தங்களது வாக்குகளை அஞ்சல் வாக்குகளாக பதிவு செய்துவருகின்றனர்.
இதேபோல் நாமக்கல்லில் காவல் துறையினர் அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் இன்று வாக்களித்தனர். ஈரோடு மக்களவைத் தொகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையமும் இடம்பெற்றுள்ளது. எனவே அங்கு பணியாற்றும் 52 காவலர்கள், இன்று நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் இன்று வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை சீலிடப்பட்ட பெட்டியில் செலுத்தினர். இந்தப் பெட்டி அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட பின்னர் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.