மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பரப்புரை செய்கிறார்.
காலை 11 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பரப்புரையைத் தொடங்கிய அவர், அதன்பிறகு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
ஆண்டிப்பட்டியில் பரப்புரை பொதுக் கூட்டத்துக்காக 200 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் வடிவில் பிரசார மேடை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு வந்த மோடி, ஹெலிபேடிலிருந்து மேடைக்கு காரில் வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த 1,600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.