திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “சேது சமுத்திர திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், திமுக அரசு அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது. நிதியை கடலில் போட்டார்களா அல்லது யாருடைய வீட்டிலாவது போட்டார்களா என்று இதுவரை தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்த திட்டம் எதையும் கிடப்பில் போடாமல் அப்படியே செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக காணாமல் போகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். உங்கள் தந்தையாரால் இயலாத காரியம் உங்களாலும் இயலாது. இலங்கையில் 40 ஆயிரம் பெண்களும், குழந்தைகளும் உயிரிழப்பதற்கு கருணாநிதியே காரணம்” என்றார்.