சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, காரைக்குடியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டிற்கு தேவை நல்ல பிரதமர். ஆகவே சென்ற தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் நரேந்திர மோடிக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றியை கொடுத்து நிலையான ஆட்சி அமைய வழிவகுக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்.
மேலும் கனவு காணும் உரிமையை நான் மறுக்க தயாராக இல்லை. 1984ஆம் ஆண்டு ப.சிதம்பரம் என்ன பேசினார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடவே இல்லை. பிறகு எப்படி திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரியவில்லை. இவர்களால் பிரதமர் யார் என்றே முடிவுசெய்ய முடியவில்லை. யாரை ஏமாற்றுவதற்கு இவ்வாறு பேசுகிறார்கள். முதலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 10 விழுக்காடு எம்.பி.க்களை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வரட்டும் பார்க்கலாம்.
18 முறை ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் ஏப்ரல் 26 வரை தங்களை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேட்டு வந்துள்ளனர். அப்படி ஊழல் வழக்கில் மாட்டியுள்ளவர்கள் எப்படி கூச்சப்படாமல் மக்களிடம் ஓட்டு கேட்டார்கள் என்று ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது.
சிவகங்கை தொகுதியின் முடிவு இங்கு பணநாயகம் வெற்றிபெறுமா? ஜனநாயகம் வெற்றிபெறுமா? சாமானியனா? ஊழல் பேர்வழிகளா? என்பதுதான் இங்கு ஒரே பிரச்சினை. பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் சென்று வருபவர் இது எல்லாம் பேசலாமா? இதன்மூலம் கார்த்தி சிதம்பரம் பொய் சொல்கிறார் என்பது பகிரங்கமாக தெரிகிறது. கார்த்தி சிதம்பரத்திற்கு தெரிந்ததெல்லாம் காசு, பணம், துட்டு, மணி... மணி. இவ்வாறு அவர் கூறினார்.