தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்துதான். அவர் காந்தியை சுட்டுக்கொன்ற இந்துவான கோட்சேதான். காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன் என்ற உரிமையில் அந்த கொலைக்கு கேள்வி எழுப்புகிறேன்" என்று பேசினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்திற்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், இன்று மீண்டும் அரவக்குறிச்சி பகுதியில் கமலின் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கமல் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் பரப்புரை செய்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.