நாமக்கல் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக சக்திவேல் போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'தேர்தல் நாள் நெருங்கிவருவதால், நான் எனது பரப்புரையை ஆதரவாளர்களுடன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன். இந்நிலையில் மோகனூர் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டபோது, அங்கு வந்த அதிமுக தொண்டர்கள் சிலர் எனது ஆதரவாளரான மணாளன் மீது தாக்குதல் நடத்தினர்.
அதைத் தட்டிக்கேட்டபோது என்னையும் தாக்க முயன்றனர். மேலும் என்னுடன் வந்த பெண் ஆதரவாளர்களை இழிவாக பேசினர். பாதுகாப்புக்கு வந்த காவல் ஆய்வாளர் முன்னிலையிலேயே சாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். பரப்புரையின்போது எனது உயிருக்கு ஆபத்துள்ளது. காவல் துறையினர் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.