பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு தொண்டாமுத்தூர் மடத்துக்குளம் உடுமலைபேட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1692 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று பொள்ளாச்சியில் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டி அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 235 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று லாரிகள் மூலம் போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வால்பாறையில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வரும் காரணத்தால் வாக்குப்பெட்டிகள் மழையில் நனையாமல் தார்பாய்களால் மூடப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் வால்பாறை மலைப்பகுதி என்பதால் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் கவனமாக செல்ல காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வால்பாறையில் உள்ள மலைவாழ் மக்கள் பகுதிகள் சின்ன கல்லார், பெரிய கல்லார், ராயன் டிவிஷன் , நல்ல முடி பூஞ்சோலை பகுதிகளில் வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியாகும். இதனால் தேர்தல் அதிகாரிகள், வனத்துறையினர் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக ஓட்டு அளிக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.