தேர்தல் பரப்புரைக்கு முன்பு, அதிமுக தன் கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் செல்வாக்கை பயன்படுத்தி வட தமிழகத்திலுள்ள 16 மக்களவைத் தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தது. அதிமுக செய்திதாள்களில் மிகப்பெரிய அணியாக காட்சிப்படுத்தப்பட்டாலும், திமுக கூட்டணி கட்சிகள் வடதமிழகத்தில் குறைந்த வாக்கு வங்கி வைத்திருந்தும் அந்த அணியே 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் முந்துவதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை என மூன்று தொகுதிகள் உள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 1.56 லட்சம் ஒட்டுகள் பெற்று நல்ல நிலையில் உள்ளது. ஆனால், அதிமுக சென்னையிலுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளை பாமக மற்றும் தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு திமுக கோட்டை என கருதப்படும் சென்னை மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை திமுக இழந்த தன் கோட்டையை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு பக்கத்தில் உள்ள தொகுதியான திருவள்ளுரில் அதிமுகவின் பலம் வாய்ந்த வேணுகோபாலுக்கு எதிராக பலவீனமான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளதால் அதிமுகவே வெற்றிகனியை பறிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த வாக்கு வங்கி பலத்தோடு பாமக, தேமுதிக செல்வாக்கும் அதிமுகவுக்கு உதவும். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரத்தை பொறுத்த வரை திமுகவே பலம் வாய்ந்தாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மக்களவை தொகுதியில் 2016 ஆம் ஆண்டு பாமக 1,72,174 ஒட்டுக்களை பெற்றது. வன்னியர் சமூக மக்கள் அதிகமுள்ள அத்தொகுதியில் அதே சமுகத்தை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தியை நிறுத்தியுள்ளது பாமக. திமுக சார்பாக களமிறங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகத்ரட்சகனுக்கு தன் சமூகம் சார்ந்த செல்வாக்குடன் உள்ளுர் செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றிபெருவது கடினமல்ல.
வேலூர் மக்களவைத் தொகுதியை பொருத்தவரை, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு எதிராக களமிறங்கப்படும் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த்-க்கு ஆதரவு பெருகுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனை அவருக்கு ஆதரவான அலையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியை பொருத்தவரை அதிமுகவுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி தொகுதி மட்டுமே உள்ளது. ஏனெனில், பலம்வாய்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரான கே.பி.முனுசாமியை எதிர்த்து காங்கிரஸ் பலவீனமான வேட்பாளரான செல்லகுமாரை நிறுத்தியுள்ளது. கர்நாடகா எல்லையில் இப்பகுதி வருவதால் பாஜகவுக்கும் இங்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அருகில் உள்ள தொகுதியான தருமபுரியில் பாமகவின் அன்புமணி, திமுக, அமமுக வேட்பாளருடன் கடுமையான போட்டியில் உள்ளார். அதேபோல், தலித் தலைவர் திருமாவளவனும் அதிமுக வேட்பாளருக்கு எதிராக கடுமையான போட்டியில் இருந்தாலும், அவருக்கு ஆதரவாக பாமகவின் எதிரிக்கட்சியான வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி செயல்படுவதால் விசிகவுக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.