வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நேற்று அங்கு நடக்கவிருந்த தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வேலூர் காட்பாடியில் துரைமுருகன் தனது வீட்டில் வழக்குரைஞர்கள், மூத்த நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அரசியல் உள்நோக்கத்திற்காக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவசர மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:
வேலூர் தொகுதி திமுக வேட்பாளராகிய நான் எனது தொகுதியில் கடுமையான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். இந்த தேர்தலில் எங்களை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளார்.
எனவே, வருமான வரித்துறையை எங்கள் மீது ஏவி விட்டனர். ஐடி அலுவலர்கள் எனது தாய் வீட்டில் 29.03.2019 அன்று சோதனை மேற்கொண்டனர். சட்டப்பிரிவு 132-ன் கீழ் சட்டத்தை மீறி விதிகளுக்கு புறம்பாக நள்ளிரவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த சோதனையின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய பணம் வைத்திருந்ததாக தவறான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டனர்.
சோதனை முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக அரசியல் போட்டியின் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது. சோதனை குறித்து தகவாற அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது வருமான வரித்துறை.
என் மீதும், திமுக கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்துவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஐடி அலுவலர்கள் சீனிவாசன் என்பவரின் குடோனிலிருந்து பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
சீனிவாசன் நான் போட்டியிடும் தொகுதியில் வசிப்பவர் அல்ல அவர் வேறு தொகுதியில் வசித்து வருகிறார். மேலும், கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையதான் என்றும் அதற்கு கணக்கு தெரிவிப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எனவே அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். மேலும் எங்கள் வீட்டில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. எனது வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
வருமான வரித்துறை பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு அக்கட்சியின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக சோதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோதனை குறித்து போலியான ஒரு அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்துள்ளது. என்னிடம் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், அது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாகவும் கூறி தேர்தலை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.
எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் மீண்டும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.