திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமமுகவின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சூழலில், சி.ஆர். சரஸ்வதியின் பரப்புரையை கேட்க மக்கள் பெரிய அளவில் கூடவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சி.ஆர்.சரஸ்வதியை நிர்வாகிகள் சமாதானம் செய்ததையடுத்து அவர் பேசிவிட்டு சென்றார்.
ஆனால், வெறும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அவர் பேச்சை கேட்க நின்றிருக்கும் வீடியோ அமமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாக கூறப்படும் டெல்டா மாவட்டத்திலேயே அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்த நிலைமையா என்றும், “ஆளே இல்லாத கடைக்கு சி.ஆர்.சரஸ்வதி யாருக்கு டீ ஆத்துகிறார்?” என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.