விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அடுத்த நொடியில் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழும். நாம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறோம். மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும் ஒழிக்க நாம் கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும்.
நமது தலைவர் கலைஞர் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், நான் கலைஞரின் மகனாக உங்களிடம் ஆதரவு கேட்கிறேன். நம் கையில் மாநில ஆட்சியும், நாம் கைகாட்டும் கட்சி மத்தியிலும் ஆளவேண்டும். தற்போது இருக்கும் வெப்பத்தின் கொடுமையை விட, நாட்டில் மோடி-எடப்பாடியின் கொடுமை அதிகமாக உள்ளது. விழுப்புரம் என் வாழ்வில் மறக்க முடியாத பகுதி. கடந்த 2003ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில்தான் எனக்கு முதன்முதலாக தலைமை ஏற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த மாநாட்டில் கலைஞர் எனக்கு கூறிய அறிவுரை இன்னும் என் நினைவில் உள்ளது.
அப்போது விமர்சிப்பவர்களும் உன்னை பாராட்ட வேண்டும் என்று தலைவர் கலைஞர் எனக்கு அந்த மாநாட்டில் அறிவுரை வழங்கினார். கலைஞர் சாதிக்க வேண்டியதை, கலைஞரின் மகன் சாதித்தான் என்று பெயர் எடுப்பேன். நீங்கள் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள்தான். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடக்கூடிய நமது வேட்பாளர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். அவருடன் சட்டப்பேரவையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
தமிழர் பிரச்னைக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுத்த ரவிக்குமாரின் குரல், நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து, சமச்சீர் கல்வி ஆகிய அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதற்காக அந்தக் கட்சியின் தலைவர் ராகுலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மோடியின் திட்டங்கள் எல்லாம் வரும், ஆனால் வராது. மத்திய அரசின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. கருப்பு பணத்தை மீட்டு உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் எனக் கூறி ஏமாற்றியவர் மோடி.
மோடியின் வாக்குறுதிகள் எல்லாம் மோசடியான வாக்குறுதிகள். வாயில் வடை சுடுவதில் மோடி கெட்டிக்காரர்.ஊர் ஊராகச் சென்று உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. நான் ஒரு விவசாயி, நான் நாட்டை ஆள கூடாதா? என்று கேள்வி கேட்கிறார் எடப்பாடி. விவசாயி நாட்டை ஆளலாம். ஆனால், விஷவாயு நாட்டை ஆளலாமா?கஜா புயலின்போது மக்களை சந்திக்காதவர், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு துணை நின்றவர், ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர், மேகதாது அணையை தடுக்காதவர் விவசாயியா? இவ்வாறு அவர் கூறினார்.