மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அனைவரின் பார்வையும் மாநிலங்களவைக்கு திரும்பியுள்ளது. 2014ஆம் ஆண்டே மக்களவையில் பாஜக பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சர்ச்சைக்குரிய முத்தலாக், குடியுரிமைச் சட்ட திருத்தம் போன்ற மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
இந்த வருட கடைசியில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக கணிசமான தொகுதிகளில் வென்றால் 2021 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறும்.
தற்போது மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 உறுப்பினர்களை கொண்டுள்ளது. பாஜக மட்டும் 73 உறுப்பினர்களும், காங்கிரஸ் 50 உறுப்பினர்களும், மற்ற எதிர்க்கட்சிகள் 101 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
2020ஆம் ஆண்டு 72 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வுபெற இருப்பதில் 15 காங்கிரஸ் உறுப்பினர்கள் அடக்கம். சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறாததால் இதில் பெரும்பான்மையான உறுப்பினர்களை காங்கிரஸ் இழக்க உள்ளது.
மாநிலங்களவையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்க நேரிடுமானால் இவர்கள் இழக்கப் போகும் இடங்களில் பெரும்பான்மையானவை பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
2020ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலை தொடருமானால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு எதிர்ப்பார்த்தைவிட உறுப்பினர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே, 2021ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 124 உறுப்பினர்களை பெற உள்ளது. இதற்கு பிறகுதான் சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தங்களை பாஜக நிறைவேற்றும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..