மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்ததுள்ளது.
மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்க உள்ள நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்த சந்திப்பை ஏற்படுத்த ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பெரும் பங்காற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது.