உத்தரகாண்ட் மாநிலம் சோலானில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி சில நேரங்களில் தன் குடும்பம் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார் என்றும், மற்ற நேரங்களில் பழிவாங்குவது குறித்துப் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார். 2019 தேர்தலில் பாஜக கண்டிப்பாகத் தோற்றுவிடும் என்பதாலேயே இதுபோன்று பேசி வருவதாக ராகுல் தெரிவித்தார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, மோடி எங்கு சென்றாலும் வெறுப்புணர்வைப் பரப்பி வருகிறார் எனக் கடுமையாகச் சாடினார்.
வேலைவாய்ப்பு, விவசாயிகளின் மன உளைச்சல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் அளித்த உறுதியை நிறைவேற்றாத நிலையில், பிரதமர் மோடி தற்போது மாம்பழம் குறித்துப் பேசி வருவதாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர், அதே வேளையில் தங்கள் கட்சி வேலைவாய்ப்பு, விவசாயிகள், ரஃபேல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேசி வருவதாக பெருமையுடன் தெரிவித்தார்.