பிரதமர் மோடி மே 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1987ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இதனை மறுக்கும் வகையில் ஓய்வுபெற்ற அட்மைரல் ராம்தாஸ் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தான் கப்பற்படையின் தலைமை பொறுப்பில் இருந்தபோது தான், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ் விராட் விமானம் தாங்கி போர் கப்பலை பயன்படுத்தினார். அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றபோது ராஜீவ், தனது மனைவி சோனியா காந்தியுடன் பயணம் செய்தது உண்மை தான். அவர் அரசின் விதிகளின்படியே அந்த பயணத்தை மேற்கொண்டார்.
எனவே பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி தனது சொந்த வேலைகளுக்காக போர் கப்பலை பயன்படுத்தினார் என்று கூறியது சுத்த பொய் என்று சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ராம்தாஸின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.