திருவாரூர்: சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வினோதினி (28) நன்னிலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
பின்னர் சேந்தமங்கலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் (MBA) பெற்றார். இவருக்குச் சிறு வயதிலிருந்தே தந்தை மாசிலாமணி அரசியல் குறித்த அனுபவங்கள், கொள்கைகள், அறிவுரைகளை வழங்கியதால், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.
திராவிட கட்சிகளும் அனைத்து பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும், பெண்களுக்குப் பாதுகாப்பான கட்சி எனவும் தோன்றியதால் அக்கட்சியில் இணைந்து மகளிரணி பாசறையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளேன் என்று வினோதினி தெரிவிக்கிறார்.
தேர்தல் குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் வேட்பாளர் வினோதினி, “நாங்கள் மக்களுக்கு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் கொடுத்து ஏமாற்றவில்லை. உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, தூய அரசியலை முன்னிறுத்திச் செயல்படுகின்றோம். எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
திராவிட கட்சிகள் பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். நாங்கள் மக்களை முழுமையாக நம்பி இருக்கின்றோம். எங்களை அவசியம் மக்கள் வெற்றிபெற வைப்பார்கள்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி வெற்றிவாகை சூடிய தொகுதியாக இருந்தும், பல்வேறு கிராமங்களில் மக்களின் அடிப்படை பிரச்னைகளான சாலை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அவற்றையெல்லாம் மாற்றியமைத்து மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிச்சயம் செய்து தருவேன்.
இந்த தொகுதியில் டெல்டா விவசாயிகள் அதிகளவில் உள்ளனர் என்பதால் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்வேன்.
அதேபோல் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்புள்ளது. அவர்களிடம் திருவாரூரில் வேளாண் கல்லூரியும், சட்டக் கல்லூரியும் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். நான் நிச்சயம் வெற்றி பெற்றால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.