சென்னை: ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (மார்ச்7) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 117 பெண் வேட்பாளர்களையும், 117 ஆண் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எப்போதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும். பெண்களை அனைத்து துறைகளிலும் சமமாக நடத்தவேண்டும் என்று இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சூளுரைத்து வருவதை நாம் காண முடியும்.
என்ன தான் பேசினாலும், சூளுரைத்தாலும் பெண்களுக்கான அந்த சமத்துவ பங்களிப்பு, அரசியலில் கிடைக்காமல் தான் இருந்தது. மாநிலத்தில் 50 ஆண்டு கால ஆட்சி செய்த திராவிட கட்சிகள், பெண்களுக்கு திருமண நிதியுதவித் தொகை, காவல் துறையில் பெண்களுக்கு வேலை, ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை போன்றவற்றை செய்து தந்தன. பெண்கள் முன்னேற்றத்திற்கான மைல்கல்லாக திகழ்ந்தன. இதில் எள்ளவும் மாற்றுக்கருத்தில்லை.
ஆனாலும், அரசியல் விவகாரங்களில் பெண்களின் பங்கு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. சமத்துவம் பேசிய திராவிடக் கட்சிகளிலும், சரிபாதி பங்கு பெண்களுக்கு வழங்கப்படவில்லை. பெரியாரின் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து, அதனை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் கட்சிகள், பெண்களின் ஆளுமை என்று வரும்போது, கொஞ்சம் பின்வாங்குவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
சாதனையோடு சரித்திரம் படைக்க கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட கற்பகவிருட்சங்கள்தான் பெண்கள்! அதனாலே என்னவோ, “காரியத்தி லுறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும்” என்று முழங்கினார் பாரதி. பாரதியின் கனவுகளுக்கு அப்போதே உயிரூட்டியவர் தந்தை பெரியார்.
இவரின் கனவை நினைவாக்கும் வகையில் “தடை விதிப்போரின் தாடையை உடை, தைரியம் விதைப்போரின் தடம் பார்த்து நட” என்று சப்தமில்லா புரட்சியை நடத்தி காட்டியுள்ளார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சூழலியல் அரசியல், தமிழர் உரிமை, சமத்துவம் என்ற முழக்கங்களுடன் தமிழ்நாடு அரசியல் பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தங்கள் கட்சி சார்பில் 20 ஆண்களையும், 20 பெண்களையும் களம் காணவைத்து சிறப்பித்தது. தொடர்ந்து இம்முறை நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117ஆண்களையும், 117 பெண்களையும் களம் காண வைக்கிறது.
பார் புகழும் தமிழ்நாட்டில் இலக்கிய நூல்கள் பல, பெண்களின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கின்றன. ஒருபுறம்,
“மங்கைய ராகப் பிறப்பதற்கே- நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா” என்கிறார் கவிமணி.
மறுபுறம்..
“உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்
அவனாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்
அவனாலே மணவாளன் சக்தி பெற்றான்” என்கிறார் பாரதிதாசன்!
இவ்வாறு பெண் சக்தியை பலர் உணர்ந்திருந்தாலும் நாட்டில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்றால், இல்லை. இதற்கான முதல் தீயை நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்கமும் அதன் ஒப்பற்ற தலைவர் பெரியாரும் பற்ற வைத்தனர். அவர் கண்ட அரசியல் கனவை நினைவாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் உள்ளன. அதற்கான நல்லதொரு சாட்சி.. மகளிர் தினம் தொடங்கும் முன்பே, மாந்தர்களுக்கு அவர் அளித்த சரிநிகர் பரிசுதான் 50 விழுக்காடு தொகுதி ஒதுக்கீடு.
நாம் தமிழர் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் 2021 பட்டியல் கீழ்வருமாறு: