நாமக்கல்: 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்கிற சுற்றுப்பயணத்தைத் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்று (பிப்.13) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பள்ளிப்பாளையத்தில் திமுகவின் சார்பில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள் மத்தியில் கனிமொழி பேசினார்.
அதில், “அதிமுக தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் செய்து வருகிறார். நியாயவிலை கடைகளில் தரமற்ற பொருட்களைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. ஏழை எளிய மக்களுக்கு முறையாகப் பொருட்கள் சென்று சேர்வதில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
இதன்பின்னர் குமாரபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, “உதய் மின் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையொப்பமிட்டு விவசாயிகள், நெசவாளர்களின் இலவச மின்சாரத்தைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உதய் மின் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், பழனிசாமி அரசு உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. தற்போது இலவச மின்சாரம் என்ற கூவலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் நெசவு தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. சாயச் சலவை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில் அமைச்சர் தங்கமணி தனது உறவினருக்கு வேண்டியவர்களுக்கு புதிதாக சாயபட்டறை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மத்திய அரசு காரணமின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. இதனால் லாரி உள்ளிட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே வழக்குத் தொடுத்துள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக செயல்படுவார்.