சென்னை: திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கோரியிருந்த நிலையில், தற்போது 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், நானும் இணைந்து திமுக - மதிமுக கூட்டணி குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டோம்.
இந்த நிகழ்வில் மதிமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.கே. மணி, மல்லை சத்யா ஆகியோர் உடனிருந்தனர். அதன்படி எங்கள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவுசெய்யப்பட்டது.
ஒரு கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தனி சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் 6 தொகுதிகளிலும் 6 சின்னத்தில் போட்டியிட வேண்டியிருக்கும். அதனால்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டோம். மாநிலம் முழுவதிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மதிமுக சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும். திராவிட இயக்கத்தை சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாக்க மதிமுக எப்போதும் துணை நிற்கும்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராவதற்கு ஸ்டாலினிடம் அனைத்துத் தகுதிகளும் இருக்கின்றன என்று கூறிய அவர், 'மிகுந்த மன திருப்தி'யுடன் இருக்கிறேன் என்றபடி செய்தியாளர்களிடமிருந்து விடைபெற்றார்.