சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, பாமக ஏற்கனவே இந்த அறிவிப்பை வெளியிட்டு, விருப்ப மனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று விருப்பமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு, இன்று முதல் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. கூட்டணி பற்றி அதிமுகவுடன் முடிவு எட்டப்படாத நிலையில், தேமுதிக இந்த அறிவிப்பினை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 10,000 ரூபாயும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு 10,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 5000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேமுதிக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று (பிப்.25) முதல், மார்ச் 5 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டுமென தேமுதிக நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். மேலும், பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியிலும், விஜயபிரபாகரன் அம்பத்தூர் தொகுதியிலும், எல்.கே. சுதீஷ் ஆம்பூர் தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளனர். இது தவிர மற்ற சில தொகுதிகளிலும் போட்டியிட விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோருக்கு விருப்பமனு பெறப்பட்டுள்ளது என்பதை தொண்டர்கள் வெளிப்படையாக கூறினார்.
இதையடுத்து கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வருகை தருவார் என்று கட்சி பிரமுகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் வராததை அடுத்து சற்று ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிங்க: தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.கே.சுதிஷ்