சென்னை காமராஜர் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பிரச்சார் பாரதி சார்பில் பகுதிநேர செய்தியாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. பணத்திற்காக தங்கள் வாக்குகளை யாரும் விற்றுவிடாமல் நியாயமான முறையில் வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "புளுடூத் போன்ற கருவிகளால் வெளியில் இருந்து இயக்க முடியாது என்பதால் இ.வி.எம்(Electronic Voting Machine), விவிபேட் (Voter-Verifiable Paper Audit Trail) இயந்திரங்களில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெற வாய்ப்பில்லை. மேலும், மாதிரி வாக்குப்பதிவின் மூலம் பதிவாகும் 50 வாக்குகளை வைத்து வாக்குப்பெட்டிகள் சரியாக உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான பாஜகவின் புகார் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுவரை ஏழாயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் இன்னும் ஏதேனும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தெரிவிக்கப்பட்டால் அவற்றையும் இத்தோடு சேர்த்துக் கொள்வோம்.
அதுமட்டுமல்லாமல், கரோனா பாதிப்பிற்குள்ளாகி வாக்களிக்க முடியாதவர்கள் வரும் மார்ச் 16ஆம் தேதிக்குள் 12D விண்ணப்பத்தை பெற்று பூர்த்திச் செய்து சமர்பித்தால் அவர்களும் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளைப் போல வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு செலுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளர்கள் வாக்களிக்க ’பிபிஇ கிட்’!