கோயம்புத்தூர்: கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் நேரடியாக மோதுகின்றனர்.
இதனால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள இங்கு, பரப்புரையின்போது இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில், நேற்று வரை தெற்குத் தொகுதியில் கமல் பரப்புரைப் பொதுக் கூட்டங்களை முடித்துவிட்டு இன்று வெளி ஊருக்குச் சென்ற நிலையில், கோவை - ராமநாதபுரம் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கமல் ஏற்கெனவே தேர்தல் முடிந்து பிக்பாஸில் நடிக்கச் சென்று விடுவதாக தெரிவித்துவிட்டார். அவரை வெற்றி பெற செய்தால், உங்கள் சட்டப்பேரவை உறுப்பினரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்க்க முடியும். உங்கள் குறைகளை டிவி முன்பு அமர்ந்து தான் சொல்ல முடியும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் தற்போது பாஜக மகளிர் அணித் தலைவியாக இருக்கின்றேன் என்றும்; என்னால் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் மோடியைச் சந்தித்து இந்த தொகுதிக்கு தேவையானவற்றை செய்து தர முடியும் என்றும் கூறினார்.