சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைமை ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறது.
இன்றைய கூட்டத்தின் முடிவில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் தனித்தனியே இருவரும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கபட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, மதுசூதனன், வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ், தமிழ் மகன் உசேன் மற்றும் வேணுகோபால் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆட்சிமன்றக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது.
குறிப்பாக ஒரு கட்சியின் ஆட்சிமன்ற குழு கூடினால், அன்றைய தினமே அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக அதிமுக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகத்தினை தொடங்கியது. விருப்ப மனு விநியோகம் மார்ச் 3ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
அதிமுகவில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆட்சி மன்றக்குழு முன்னிலையில் ஒரே கட்டமாக நேற்று (மார்ச்.4) நடந்து முடிந்தது. இச்சூழலில் இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.