மயிலாடுதுறை: குடிபோதையில் முதியவரை அடித்துக் கொலைசெய்த இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் நேற்று (ஜூன் 23) அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (33) என்பவர் குடிபோதையில் செங்கல் சூளைக்குச் சென்று அங்கிருந்த மரக்கழிகளை எடுத்துள்ளார்.
அதனைத் தட்டிக்கேட்ட கணேசனை, ரஞ்சித்குமார் கட்டையால் தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி (50) என்பவர் ஓடிவந்து தடுக்க முயன்றபோது அவரையும் ரஞ்சித்குமார் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்த கணேசனை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் உயிரிழந்தார்.
இது குறித்து ரவி அளித்த புகாரின்பேரில் பாலையூர் காவல் துறையினர் கொலை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாமியார் வேடமிட்டு கஞ்சா கடத்திய இருவர் கைது!