திண்டுக்கல்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் நண்பர்களுடன் வனப்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர், 24 மணி நேரத்திற்கு பின்பு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பள்ளப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த விகடன் என்பவருடைய மகன் நோபல் நேதாஜி (28). இவர், தளர்வுகளற்ற ஊரடங்கை விதிகளை மீறி பொழுதைக் கழிக்க நேற்று முன்தினம் (மே.29) தனது நண்பர்களான பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர்(19), சிவகுமார்(23) விக்ரம்(21) உள்ளிட்ட 11 பேருடன் மாவூர் அணைக்கு குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறுமலை அடிவாரப் பகுதியில் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் மாவூர் அணையிலிருந்து மலைப்பகுதி வழியாக நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மஞ்சள் மேடு என்ற வனப்பகுதிக்கு நண்பர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது "நோபல் நேதாஜி தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், நான் வரவில்லை வீட்டிற்கு செல்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியுள்ளார். நேதாஜியை விட்டுவிட்டு மற்ற நண்பர்கள் 10 பேரும் மஞ்சள் மெட்டு பகுதியில் குளித்து விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். ஆனால் நோபல் நேதாஜி மட்டும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த அவருடைய தந்தை விகடன் மற்ற நண்பர்களிடம், 'எனது மகன் எங்கே?' என்று விசாரித்துள்ளார். நேதாஜி தங்களுடன் வரவில்லை, பாதியிலேயே வீடுதிரும்பி விட்டதாக நண்பர்கள் கூறினர்.
இதையடுத்து விகடன், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவே நேற்று (மே.30) காலை முதல் காவல்துறையினர், வனத்துறையினர் உதவியோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதியில் இளைஞர் நோபல் நேதாஜி சந்தேகமான முறையில் இறந்து கிடந்துள்ளார். உடலை மீட்ட அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இந்தப்பகுதியில் ஆறு பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!