கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட வேலாயுதம்பாளையம், பேச்சஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் சின்னப்பன், ஆனந்தஜோதி தம்பதி.
இவர்களுக்கு ராகுல் ராஜ் (28) என்ற ஒருமகன் உள்ளார். சின்னப்பன் ஏற்கனவே இறந்து விட்டதால் ஆனந்தஜோதியும் அவரது மகன் ராகுல் ராஜும் வசித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்.6) ராகுல் ராஜ் தனது தோட்டத்தில் உள்ள தரைமட்ட கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்ற போது திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் உதவியுடன் நீரில் மூழ்கிய ராகுல் ராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மனைவிக்கு வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்தில் கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.