காஞ்சிபுரம்: மணிமங்கலம் காவலர் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர் கையூட்டு பெறும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப்பின் காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின் காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பொது மக்களிடம் நட்பு பாராட்டும் விதமாகவும், காவலர்கள் மீது பொது மக்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர் சோதனைச் சாவடியில், இரவு நேர பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர் ஒருவர் அச்சோதனைச் சாவடியை கடந்து செல்லும் கனரக லாரிகள், மினி சரக்கு வாகனங்கள், குடிநீர் வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களிடமிருந்து கையூட்டு பெறுகிறார். இதனை நாற்காலியில் அமர்ந்தபடி வேறொரு காவல் அலுவலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பான காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வேலுார் சேவூரைச் சேர்ந்த 15ஆவது பட்டாலியனை சார்ந்த பி.சி.3559 பிரவின் குமார் என்ற காவலர் தான் இரவு நேர பாதுகாப்புப் பணியின் போது சோதனைச்சாவடியை கடந்துச் செல்லும் வாகன ஓட்டுநர்களிடமிருந்து கையூட்டு பெறுவதாகவும், இது குறித்து துறை சார்ந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மளிகைக் கடையில் பெண்ணிடம் செயின் பறிப்பு- சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை