சேலம் மாவட்டம், எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று(பிப்.17) அவர் கடையில் இல்லாத நேரத்தில், மகன் ரமேசும், மனைவி மஞ்சுளாவும் விற்பனையைக் கவனித்து வந்தனர்.
அப்போது கடைக்கு வந்த நடுத்தர வயது தோற்றம் கொண்ட நபர் ஒருவர், ரமேஷிடம், சிகரெட் பாக்கெட் தருமாறு கேட்டுள்ளார். பின்பு அதை வாங்கிக் கொண்டு, தன்னை 'உணவு பாதுகாப்பு அலுவலர்' என்று அடையாளப்படுத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வியாபாரம் செய்வது குற்றம் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து கடையிலும், வீட்டிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் பயந்து போன கோவிந்தராஜ் மகன் ரமேஷ், அவரை சோதனைக்கு அனுமதித்தார்.
வீட்டினுள் சென்ற அந்த நபர், பீரோவையும் திறக்கச் சொல்லி சோதனையிட்டுள்ளார். பின்னர், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததால், அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறி, 1000 ரூபாய் பணத்தை அபராதத் தொகையாகப் பெற்றுக்கொண்டு எச்சரிக்கை விடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அவர் சென்ற பிறகு கோவிந்தராஜ் மனைவியும், மகனும் பீரோவில் இருந்த பொருட்களை சரிபார்த்தனர். அப்போது சுமார் 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனே எடப்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் விசாரணை நடத்தியதில், ரமேஷ் 1000 ரூபாய் பணத்தை எடுக்கச் சென்ற நேரத்தில், பீரோவிலிருந்த நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க; இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை!