சென்னை குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியில் வசித்து வருபவர் குமார் (43). இவர்அப்பகுதியில் வேதா மெஸ் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.
சேம்பர்ஸ் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் மாமுல் வாங்குவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அனைத்து கடை உரிமையாளர்களும் குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக குமார் யுவராஜை பலமுறை எச்சரித்தும், அவர் தொடர்ந்து மாமூல் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குமார் குரோம்பட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் யுவராஜ் கோபத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (பிப்.12) யுவராஜின் மகன் சதீஷ் என்பவர் அவரின் நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு, குமாரின் கடைக்குச் சென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரின் கை, கழுத்து, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(பிப்.13) பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் குரோம்பேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தவர்களை நிறுத்தி விசாரித்தபோது, இரண்டு பேரும் குரோம்பேட்டையில் உணவக உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியதும். அவர்கள் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (19), மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சதீஷின் தந்தைக்கு மாமூல் தர மறுத்ததால், தன் நண்பருடன் சேர்ந்து குமாரை கத்தியால் வெட்டியதாக சதீஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...கோவிட் பாதிப்பு; பழ நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்