சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கடந்த மாதம் இரு பெண்கள் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர் அருள் (20) என்பவரிடம் சவாரிக்கு வருமாறு கேட்டுள்ளனர். தங்களை பணக்காரர்போல் காட்டிக்கொண்டு சென்னையைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தங்களுக்குத் தங்குவதற்கு நல்ல விடுதியை ஏற்பாடு செய்துதருமாறும், நாள்தோறும் வந்து தங்களை அழைத்துச் சென்று சென்னையைச் சுற்றிக் காட்டுமாறும் அருளிடம் அவர்கள் தெரிவித்து செல்போன் எண்ணையும், அதற்கான முன் பணத்தையும் அளித்துள்ளனர்.
மேலும் அடுத்தடுத்த நாள்களில் அருளை தொடர்புகொண்டு வரவழைத்து ஆட்டோவில் ரோகிணி திரையரங்கம், கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று சுற்றியுள்ளனர்.
இவர்கள் இருவரும் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆட்டோ ஓட்டுநர் அருளுக்கும் டிக்கெட் எடுத்து அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அந்தப் பெண்கள், அருளிடம் தாங்கள் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தங்களிடம் நிறைய கறுப்புப் பணம் உள்ளதாகவும் அதை வெள்ளையாக மாற்ற உதவி செய்தால் கமிஷனாக நிறைய பணம் தருகிறோம் என ஆசைவார்த்தைக் கூறியுள்ளனர்.
மேலும், தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அடகுவைத்த நகையின் ரசீது தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அருள் தனது நண்பர் அடகுவைத்த 10 சவரன் நகையின் ரசீது, எட்டு சவரன் நகை ஆகியவற்றை அப்பெண்களிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் இருவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டு சிறிய ஒரு தொகையை ஆட்டோ ஓட்டுநர் அருளிடம் கொடுத்துவிட்டு, பணத்தை முழுவதுமாக மாற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாள்கள் கடக்க அவர்களின் போக்கில் சந்தேகமடைந்த அருள் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து கோயம்பேடு நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் அருளின் உதவியுடன் மேலும் 10 சவரன் நகை இருப்பதாகக் கூறி செல்போன் மூலம் தொடர்புகொண்டு இருவரையும் கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் அருகே வரவழைத்துள்ளனர்.
அங்கு வந்த இருவரையும் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (25) என்பதும் அவரது கணவர் மலேசியாவில் பணிபுரிந்துவருவதும், நர்சிங் படித்துள்ள 17 வயது சிறுமியை கூட்டு சேர்த்து மோசடி வேலைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அருளிடம் பெற்ற நகைகளை விற்று செலவு செய்தது போக அவர்களிடமிருந்த எட்டு சவரன் நகைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் 17 வயது சிறுமியை கெல்லிஸ் காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர் ரேவதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர்.