சேலம்: சேர்வராயன் மலை வனப்பகுதிகளில் மான், முயல் முதலியவற்றை வேட்டையாடிய இருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்துறையினரிடம் சிக்கினர். இது தொடர்பாக சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில்:
"நேற்று (ஏப்.10) இரவு சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில், ஏற்காடு மலை அடிவாரத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் 2 பேர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, வனவர்கள், வனச்சரக வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், தேக்கம்பட்டி பிரிவு, குரும்பப்பட்டி காப்புக்காடு, தேக்கம்பட்டி ஆகிய வனப் பகுதிகளில் இரவு ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவு 2.00 மணியளவில் தேக்கம்பட்டி காட்டிற்குள், இருவர் மறைந்திருந்து வனவிலங்குகளை நாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர்களை பிடித்து விசாரித்ததில், இருவரும் சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதையன் (56), பெரியசாமி (28) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரக வனவிலங்கு குற்ற வழக்கு அறிக்கை எண்-07/2021இன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
இதையும் படிங்க: பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் உயிரிழப்பு