சென்னை: பாரிமுனையில் பாண்டி என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வந்த மளிகைக் கடையில், மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
கோடிக்கணக்கில் கையாடல்
வேலைக்கு சேர்ந்தது முதல் உரிமையாளரான பாண்டிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்துகொண்டு கடையின் பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கினார் வேல்முருகன்.
தொடர்ந்து சுமூகமாக சென்று வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்தை தன் பெயரிலும், தனது மனைவி, சகோதரர், சகோதரர் மனைவி பெயர்களிலும் புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்கி செலுத்தத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், வேல்முருகன் சுமார் 1.50 கோடி ரூபாய் பணம் வரை கையாடல் செய்துள்ளார்.
உரிமையாளர் புகார்
இந்நிலையில், தொடர்ந்து லாபம் குறைந்து வந்ததையடுத்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் பாண்டி, இச்சம்பவம் தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகாரளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணக் கையாடலில் ஈடுபட்ட வேல்முருகனை, பிப்ரவரி 20ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான பணியாளர் குடும்பத்தார்
இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளான வேல்முருகனின் மனைவி பூர்ணிமா, சகோரரர் மனைவி வினோதா, சகோதரர் உள்ளிட்டோரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பூர்ணிமா, வினோதா ஆகிய இருவரும் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த அவர்கள் தலைமறைவாக இருந்து வந்த பூர்ணிமா, வினோதா ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் வேல்முருகனின் சகோதரரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்