திண்டுக்கல்: வேடசந்தூர், சீனி ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் பயாஸ். இவரது நண்பர் நேருஜி நகரை சேர்ந்தவர் ஜாவித். ஹைதராபாத் செல்லும் ஜாவித்தை பேருந்து ஏற்றி விடுவதற்காக பயாஸ் அவரை ஒரு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வேடசந்தூர் கரூர் சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தின் அருகே இருசக்கர வாகனம் சென்ற போது, திடீரென லாரி மறுபக்கம் செல்வதற்காக சாலையின் குறுக்கே புகுந்தது.
அப்போது அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த ஜாவீத் மற்றும் பயாஸ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்திலிருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பேருந்து...டம் டம் பாறை பள்ளத்தில் கவிழ்ந்தது