திருப்பத்தூர்: வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர், பல சமூக சேவைகளை ஆற்றிவந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மசூதியிலிருந்து தொழுகையை முடித்துவிட்டு, நேற்று (செப். 10) மாலை 6.40 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
தலை துண்டிப்பு
அவர் நடந்து வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் அவரைத் தாக்கி, தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். வசீம் அக்ரம் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார்.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். அதற்கு முன்னர், தகவல் அறிந்த மஜகவினர், படுகொலைசெய்யப்பட்ட வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
வேலூரில் உடற்கூராய்வு
இதனால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால், உடனடியாக வசீம் அக்ரம் உடலை காவல் துறையினர் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பதிலாக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், கொலைசெய்யப்பட்ட வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வாணியம்பாடி நகருக்கு வரும் போக்குவரத்துச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, வாணியம்பாடி நகரம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
3 தனிப்படை; 2 பேர் கைது
இது குறித்து, வேலூர் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வசீம் அக்ரமை கொலைசெய்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலையில் தொடர்புடையதாக இருவரை கைதுசெய்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...