தூத்துக்குடியில் சட்டவிரோதமாக, கர்நாடகா மாநில மதுபான பாட்டில்கள் விற்பனைக்குக் கொண்டு செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையிலான தனிப்படையினர் குரும்பூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, அதைத் தொடர்ந்து வந்த கார் ஆகியவற்றை மறித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியில் 49 அட்டைப் பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள், ஆயிரத்து 872 மதுபான பாக்கெட்டுகள் என மொத்தம் 2 ஆயிரத்து 352 மதுபாட்டில்கள், 14 லட்சத்து 51 ஆயிரத்து 850 ரூபாய் ரொக்க பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் மதுபானங்களை கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், லாரி, காரில் வந்த நபர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவராமன் (40), திருப்பூர் மாவட்டம் படியூரைச் சேர்ந்த மெய்யழகன் (38), மன்னரைபாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (35) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.