திண்டுக்கல்: பழனி பகுதிகளில் கடந்த சில நாள்களாக திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளில் கேமரா பொருத்துவதற்கு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 11) இரவு பழனி திருநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டும், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடவும் முயன்றுள்ளனர். இதனால், அச்சமடைந்த அப்பகுதியினர் திருட்டு முயற்சி குறித்து பழனி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர். அதில், மூன்று நபர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று நோட்டமிடுவதும், அதில் ஒரு வீட்டிற்குள் ஏறிக் குதித்து சென்று திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த, சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து பழனி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவு, பகல் நேரங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: யார் பெரிய ரவுடி: டபுள் ரஞ்சித் கொலையில் 8 பேர் கைது