ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (35). இவருக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் வேளாண்மை செய்துகொண்டு, அந்தியூரிலுள்ள தனியார் மாவு ஆலையில் ஊழியராகவும் பணியாற்றிவந்தார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனது மனைவி (20) மைதிலியுடன் அந்தியூர் காலனி தோட்டத்து வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி நந்தகுமாருக்குத் திடீரென வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்ததில் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், நீதித் துறை நடுவர் வரவழைக்கப்பட்டு நந்தகுமாரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில், நந்தகுமார் பிப்ரவரி 15ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரண வாக்குமூலத்தில், கடந்த 28ஆம் தேதி தனது தேட்டத்தில் பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு பின்னர் வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளார்.
அப்போது உணவு கசப்பாக இருக்கவே இது குறித்து மனைவியிடம் கேட்டபோது எதுவுமில்லை என்று கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி மைதிலியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில், "என்னுடைய கணவர் நந்தகுமார் இரவு-பகல் பாராமல் 24 மணி நேரமும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள தொந்தரவு செய்துவந்தார்.
தற்போது நான் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளேன். கர்ப்பிணியென்றும் பாராமல் தொடர்ந்து என்னை வற்புறுத்திவந்தார். எவ்வளவோ கூறியும் அதனை உதாசீனப்படுத்தியதால் எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மைதிலியைக் கொலைசெய்த வழக்கின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை முன்னிறுத்தி சிறைக் காவலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறைச் சாலைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!