மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், நூற்றாண்டு பழமையான தேசிய மேல்நிலைப் பள்ளியில் 2010ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புமுதல் 2018ஆம் ஆண்டு 12ஆம் வகுப்புவரை படித்துள்ளார்.
வீட்டிற்கு அழைத்து தொந்தரவு
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி, தேசிய மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளதாகவும், பயிற்சி அளித்த ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், உடல் ரீதியாகச் சீண்டியதாகவும் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டு அந்த மாணவியை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அம்மாணவி புகார் அளித்துள்ளார்.
பொதுவெளிக்கு வரும் பாலியல் புகார்கள்
பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்த மாணவி, சமீபத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்துவருவதையும், அதனையடுத்து ஆசிரியர்கள் கைதுசெய்யப்படுவதையும் அறிந்து தைரியம் அடைந்துள்ளார். அதனால், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பையும் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போக்சோவில் கைது
மயிலாடுதுறை மாணவி அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அறிந்த ஏராளமான தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர்.
காழ்புணர்ச்சிதான் காரணம்
புகார் அளித்த பள்ளி மாணவியின் தோழி கூறுகையில், "ஆசிரியர் அண்ணாதுரை எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் என்பதால் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த அவதூறு புகாரை அந்தப் பெண் அளித்திருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் விசாரணை